Friday, January 13, 2006

திருப்பள்ளியெழுச்சி 10
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது (சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.

திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி நிறைவுற்றது.

(திருமுறைகளை விளக்கத்துடன் காண http://www.shaivam.org/siddhnata/thisl.htm )

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 12, 2006

திருப்பள்ளியெழுச்சி 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) - அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 11, 2006

திருப்பள்ளியெழுச்சி 8

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே.

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைநிலையும், இறுதியும் ஆனவரே! உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும்?! (பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும் உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழமை வாய்ந்த (மனத்து)
இல்லங்கள் தோறும் எழுந்தருளுகின்ற பரமனே! சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி, திருப்பெருந்துறையில் உள்ள கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும் காட்டி என்னை ஆண்டாய்! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 10, 2006

திருப்பள்ளியெழுச்சி 7
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.
"அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவை போல இனியது, அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என(அதன் தன்மையையும்), "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (அவரையும்) அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை! (அப்படிப்பட்ட தாங்கள்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர்! தேன்மிகுகின்ற சோலைகள் உள்ள திருவுத்தர கோச மங்கையில் வீற்றிருப்பவனே! திருப்பெருந்துறைக்கு அரசே! எது எங்களைப்பணி கொள்ளும் வகை? அதன்படியே நடப்போம்! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க!!

ஆறு - வழி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 09, 2006

திருப்பள்ளியெழுச்சி 6
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, January 08, 2006

திருப்பள்ளியெழுச்சி 5

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களைநாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே ! (எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, January 07, 2006

திருப்பள்ளியெழுச்சி 4
இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கயில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும், (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும்;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே!
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க!

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.