Tuesday, December 27, 2005

திருவெம்பாவை 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பதுபோலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்துஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At 11:11 AM, Blogger குமரன் (Kumaran) said...

//எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் //

இதற்கான விளக்கம் சரியாகப் புரியவில்லை. மேலும் விளக்குகிறீர்களா?

 
At 10:23 PM, Blogger மணியன் said...

எனக்கு இதிலே சிலேடையணி பயில்வதாகத் தோன்றுகிறது.
கார்மலர்- கருமை நிறமுள்ள பிராட்டியார்
செங்கமலம் - சிவந்த நிறமுடைய எம்பெருமான்
குருகினத்தின் அரவம் - அடியார்களின் பக்தி கோஷம்
மலம்கழுவுவார்வந்து சேர்தல் - புற அழுக்கைப் போக்க பொங்குமடுவையும், அகஅழுக்கைப் போக்க இறைவனையும் சார்தலினால்
//எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் // எனக் கொள்ளலாம்.
இது எனது சொந்த விளக்கம்.

 
At 10:46 AM, Blogger குமரன் (Kumaran) said...

ஆஹா. அருமையான விளக்கம் மணியன். நினைத்தாலே இனிக்கிறது.

 

Post a Comment

<< Home